பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி
மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.;
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இதில் கவிதை போட்டியில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி பிரகதி முதல் பரிசும், பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி சிவகீர்த்தனா 2-ம் பரிசும், பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி கோபிகா 3-வது பரிசும் பெற்றனர்.
பாராட்டு சான்றிதழ்கள்
கட்டுரை போட்டியில் கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரேயா முதல் பரிசும், சின்னதாராபுரம் ஆர்.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி சுபஸ்ரீ 2-ம் பரிசும், சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி சந்தியா 3-வது பரிசும் பெற்றனர்.
பேச்சு போட்டியில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவன் சசிதரன் முதல் பரிசும், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி பெரியக்காள் 2-ம் பரிசும், சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி அருள்மணி 3-வது பரிசும் பெற்றனர்.இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் நடுவர்களாக 9 முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் செயல்பட்டனர் என தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி தெரிவித்தார்.