எலி பேஸ்ட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

எலி பேஸ்ட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்தார்.;

Update:2023-07-02 00:15 IST

சிவகங்கை, 

சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

எலிபேஸ்ட் என்ற 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லிமருந்துகள், தற்கொலைக்காக பொதுமக்களிடையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தவகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடைவிதித்துள்ளது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனியார் பூச்சிமருந்து விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலிபேஸ்ட் மருந்தினை விற்பனை செய்திட கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, விவசாயிகள் சுற்றுச்சூழல் மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எலிபேஸ்ட் மருந்தினை வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், இதற்கான மாற்று மருந்து விவரங்களை வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில் ஏதேனும் விற்பனை நிலையங்களில் எலிபேஸ்ட் மருந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விற்பனை நிலையங்கள் மீது பூச்சிமருந்து சட்டம் 1968-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்