3-ம் வகுப்பு மாணவனை முட்டி போட சொன்ன விவகாரம்: அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

Update:2023-03-25 00:15 IST

ராசிபுரம்:

3-ம் வகுப்பு மாணவனை முட்டி போட சொன்ன விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

3-ம் வகுப்பு மாணவன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொட்டியப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 32 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை பணி புரிந்து வருகின்றனர். கடந்த வாரம் இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களுக்கான கூட்டத்துக்கு சென்று விட்டனர்.

இதனால் போடிநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மணிகண்டன், தொட்டியப்பட்டி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்தார். அப்போது அவர் மாணவிகள் சிலரை தின்பண்டம் வாங்க கடைக்கு அனுப்பி உள்ளார். அவர்களுடன் 3-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சென்றான்.

பணி இடைநீக்கம்

இதனை அறிந்த மணிகண்டன் அந்த மாணவனை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவனை முட்டி போட சொன்னதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனால் முட்டி போட சொன்ன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராசிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மாணவனை முட்டி போட சொன்ன ஆசிரியர் மணிகண்டனை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்