ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்றபொங்களாயி அம்மன் கோவில் திருவிழா177 ஆடுகள் பலியிட்டு அன்னதானம்
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற பொங்களாயி அம்மன் கோவில் திருவிழாவில் 177 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூச்சாட்டுதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாம்பட்டி போதமலை அடிவாரத்தில் ஆலமரத்தடியில் பிரசித்தி பெற்ற மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
வழக்கம்போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் பொங்களாயி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அசைவ அன்னதானம் வழங்குவதற்காக 12 மூட்டை பச்சரியை கொண்டு பொங்கல் தயாரித்தனர்.
177 ஆடுகள்
இதற்கிடையே அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் 177 ஆடுகளை கொண்டு வந்து வெட்டி பலியிட்டனர். முதலில் பெண் ஆடு பலியிடப்பட்டது. பின்னர் பலியிடப்பட்ட ஆட்டிறைச்சி சமைக்கப்பட்டது.
இவ்வாறு சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை பொங்கல் சாதத்துடன் பக்தர்களுக்கு நேற்று காலை 6 மணி முதல் வழங்கினர். கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் அசைவ உணவு சாப்பிட்டனர்.
இந்த திருவிழாவில் வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.