மலைக்க வைக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை
திண்டுக்கல் மலைக்கோட்டை, அங்குள்ள கோவிலை சீரமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.;
திண்டுக்கல் மலைக்கோட்டை
திண்டுக்கல்லின் வரலாற்றை பறைசாற்றும் வகையில், நகரின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையே அதற்கு சாட்சி. 'திண்டு' போன்று அமைந்துள்ள பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் மலைக்கோட்டை, மண்ணின் வீரம் மற்றும் கலைக்கு ஒரு சான்று. திண்டுக்கல் மலைக்கோட்டை, கடந்த 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
எதிரி படைகளின் ஊடுருவலை கண்காணிக்க இடம் தேடியபோது 'திண்டு' போன்ற பாறை மன்னரில் கண்ணில் தென்பட்டது. திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் 30 கி.மீ. தூரத்தில் வரும் எதிரி படைகளை கூட எளிதாக பார்த்து விடலாம். இதனால் அங்கு மலைக்கோட்டையை எழுப்பி படைதலமாக மாற்றினார் அவர்.
மதுரையை ஆண்ட மன்னர்களுக்கு, திண்டுக்கல் மலைக்கோட்டை சிறந்த ராணுவ கேந்திரமாக பயன்பட்டது. எனவே மலைக்கோட்டை மீது பல மன்னர்களின் பார்வை விழுந்தது. மலைக்கோட்டையை கைப்பற்ற பல மன்னர்கள் முயன்று கோட்டை விட்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.
அதேநேரம் திண்டுக்கல் மலைக்கோட்டையை திருமலைநாயக்கர், ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகியோர் விரிவுபடுத்தி கட்டினர்.
ராணுவ கேந்திரம்
தென்தமிழகத்தின் நுழைவுவாயிலாக திகழ்ந்ததால், படைவீரர்களை நிறுத்தி வைக்கும் இடமாக திண்டுக்கல் மாறியது. ஹைதர்அலி, திப்புசுல்தான் காலத்திலும் மலைக்கோட்டை ராணுவகேந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதற்கு சாட்சியாக படைவீரர்கள் தங்கிய அறைகள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கிடங்கு, பீரங்கி மேடு, சமையல் கூடம் போன்றவை தற்போதும் இருக்கின்றன.
மேலும் மலைக்கோட்டையில் இருந்து எதிரி படைகள் வருவதை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் சிவகங்கையை கைப்பற்றி விடவே, நாட்டை இழந்த வேலுநாச்சியார் மாறுவேடத்தில் வெளியேறி தஞ்சம் தேடி வந்த இடம் திண்டுக்கல் தான். வீரமங்கை வேலுநாச்சியார் நீண்ட நாட்கள் திண்டுக்கல்லில் தங்கி இருந்தார்.
திப்புசுல்தான், விருப்பாட்சி கோபால்நாயக்கர் ஆகியோரின் உதவியோடு வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை வீழ்த்தி சிவகங்கையை மீட்பதற்கு திட்டம் வகுத்த இடம் திண்டுக்கல் மலைக்கோட்டை ஆகும். அங்கிருந்து புறப்பட்ட வேலுநாச்சியார் படைகளை திரட்டி சென்று சிவகங்கையை மீட்டது வரலாறு. அத்தகைய பெருமை பெற்றது நமது திண்டுக்கல் மலைக்கோட்டை ஆகும்.
நூற்றாண்டுகளை கடந்தது
திண்டுக்கல் மலைக்கோட்டையின் அருமையை அறிந்த ஆங்கிலேயர்களும் அதன் மீது கண் வைத்தனர். பின்னர் ஆங்கிலேயர்களின் வசம் மலைக்கோட்டை சென்றது. சுமார் 150 ஆண்டுகள் திண்டுக்கல் மலைக்கோட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்தது. திண்டுக்கல் மலைக்கோட்டை பல போர்களை சந்தித்து இருக்கிறது. முக்கிய போர்களுக்கு, திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து வீரர்கள் சென்றனர்.
பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான திண்டுக்கல் மலைக்கோட்டை பல நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. திண்டுக்கல் வரலாற்றில் சின்னமாக திகழும் மலைக்கோட்டை கருங்கல் மற்றும் செங்கல்களால் கட்டப்பட்டவை ஆகும். இதில் கருங்கல் கட்டிடங்கள் அப்படியே உறுதியாக நிற்கின்றன. ஆனால் செங்கல் கட்டிடங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகின்றன.
பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன்
இந்த மலைக்கோட்டையின் உச்சியில் மிகவும் பழமையான கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் பத்மகிரீஸ்வரராகவும், பார்வதி தேவி அபிராமி அம்மனாகவும் எழுந்தருளி அருள்பாலித்த கோவில் ஆகும். திண்டுக்கல் மலைக்கோட்டை ராணுவ கேந்திராமாக மாற்றப்பட்டதால் பக்தர்கள் வடிவில் ஒற்றர்கள் வரக்கூடும் என்று கருதி, கோவிலில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 230 ஆண்டுகளாக மலைக்கோட்டை கோவிலில் வழிபாடுகள் நடைபெறவில்லை.
மேலும் மலைக்கோட்டையில் 2 தெப்பங்கள் உள்ளன. மலைக்கோட்டையில் விழும் மழைநீர் தெப்பங்களில் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2 தெப்பங்களிலும் சுனை இருக்கிறது. இதனால் கடுமையான வறட்சியிலும் 2 தெப்பங்களும் வற்றுவது இல்லை. அவை முன்பு புனித தீர்த்த தெப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வறட்சி காலத்தில் திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் இளைஞர்களும், இளம்பெண்களுமே அதிகம்.
இவ்வாறு மலைக்கோட்டையை சுற்றி பார்க்க வருபவர்களில் சிலர் அங்குள்ள வரலாற்று சின்னம் எனும் நினைப்பு இல்லாமல் சிதைப்பது வேதனையாக இருக்கிறது. பீரங்கி மேடு, காவலர் நிற்கும் இடம், படைவீரர்களின் அறை ஆகியவற்றில் கரியை பயன்படுத்தி எழுதுகின்றனர்.
பராமரிப்பு அவசியம்
இதேபோல் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவிலில் சுவர்கள், கோபுரம் ஆகியவற்றில் கலைநயமிக்க சிற்பங்கள் உள்ளன. அதன் அருமை தெரியாமல் உடைத்து சேதப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி மலைக்கோட்டை வளாகம், கோவில் வளாகம் ஆகிய பகுதிகளை அசுத்தம் செய்கின்றனர்.
இதேபோல் மலைக்கோட்டையில் பல பகுதிகளில் புதர் மண்டி காணப்படுகின்றன. கோட்டை சுவரும் ஒருசில இடங்களில் சிதிலமடைந்து விட்டது. இதனால் மலைக்கோட்டை, அங்குள்ள கோவிலை சீரமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர், ஆர்வலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
வரலாற்று பொக்கிஷம்
திண்டுக்கல்லை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ்:-
16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாற்றின் பொக்கிஷம் ஆகும். முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் காலம் முதல் ராணுவகேந்திரமாக திகழ்ந்தது. 7-ம் நூற்றாண்டிலேயே மலைக்கோட்டை உச்சியில் சிவபெருமானை வழிபட்டு வந்தது தெரிகிறது. திண்டீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமானை பக்தர்கள் வழிபட்டுள்ளனர். இந்த மலைக்கோட்டையில் நிறைய கல்வெட்டுகள், வரலாற்று சான்றுகள், ரகசிய பாதை, சமணர் படுகை என பல வரலாற்று சின்னங்கள் உள்ளன. மலைக்கோட்டையின் செங்கல் கட்டிடங்கள் சேதமாகி வருகின்றன. அதேபோல் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவிலும் சிதிலமடைந்து வருகிறது. இந்த மலைக்கோட்டையை சீரமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்றினால் நன்றாக இருக்கும். முறையாக பராமரித்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மலைக்கோட்டை கம்பீரமாக இருக்கும். தமிழக வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பதாக அமையும்.
சிதிலமடைந்த சிற்பங்கள்
வரலாற்று ஆர்வலர் சந்திரசேகரன்:-
திண்டுக்கல் மலைக்கோட்டையை மேம்படுத்துவதற்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மலைக்கோட்டை, கோவில் வளாகத்தை அசுத்தம் செய்கின்றனர். கோவில் வளாகத்தில் அமர்ந்து காதலர்கள் அத்துமீறுகின்றனர். எனவே மலைக்கோட்டையில் பல இடங்களில் புதர் மண்டி கிடப்பதை அகற்ற வேண்டும். மேலும் மலைக்கோட்டை, கோவிலில் சிதிலமடைந்த சிற்பங்கள் ஆகியவற்றை புனரமைக்க வேண்டும். மேலும் குடிநீர், கழிப்பறை, மலைக்கோட்டையில் ஏறுவதற்கு கைப்பிடி கம்பிகள், முறையான படிக்கட்டுகள், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலைக்கோட்டைக்கு வரும் அனைவரையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும். தாலுகா அலுவலக சாலையில் இருந்து மலைக்கோட்டை நுழைவுவாயில் வரையுள்ள சாலையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.