யானைகள் கடந்து செல்ல முதல் ரெயில்வே சுரங்க பாலம்

எட்டிமடை-வாளையார் இடையே யானைகள் கடந்து செல்ல முதல் ரெயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.;

Update:2023-06-16 00:30 IST

கோவை

எட்டிமடை-வாளையார் இடையே யானைகள் கடந்து செல்ல முதல் ரெயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

காட்டு யானைகள் உயிரிழப்பு

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி காட்டு யானைகள் நடமாட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. கோவையில் இருந்து மதுக்கரை, எட்டிமடை வழியாக வனப்பகுதியையொட்டி ரெயில் தண்டவாளம் செல்கிறது. "பி " மற்றும் "ஏ " லைன் என்று 2 ரெயில் பாதை வழியாக தினமும் 100 ரெயில்கள் செல்கின்றன.

காட்டு யானைகள் இரவு நேரத்தில் கடந்து செல்லும்போது, ரெயிலிலில் அடிபட்டு உயரிழக்கின்றன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழக, கேரள பகுதியில் ரெயிலில் அடிபட்டு 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

யானைகள் கடக்கும் பகுதியில் ரெயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று ரெயில்வே துறை உத்தரவிட்டும், வெளிமாநில என்ஜின் டிரைவர்கள் இதனை கவனிக்காமல் அதிவேகமாக ஓட்டி வரும்போது ரெயில்களில் அடிபட்டு யானைகள் இறக்கும நிலை ஏற்படுகிறது.

சுரங்க பாலம்

யானைகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை மற்றும் ரெயில்வே துறை ஆலோசனையின் அடிப்படையில், யானைகள் தண்டவாளம் வழியாக கடக்காமல் அடிப்பகுதி வழியாக கடந்து செல்ல எட்டிமடை-வாளையார் இடையே சுரங்க பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனபடி ரூ.7 கோடியே 49 லட்சம் செலவில் வாளையார் அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி பாலக்காடு ரெயில்வே கோட்டம் சார்பில் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது.

தற்போது சுரங்கபாலத்தின் காரிடர்கள் (தண்டவாளத்தை தாங்கும் தூண்கள்) பொருத்தப்பட்டு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

இதற்காக பி லைன் பகுதியில் ரெயில்போக்குவரத்தை தடை செய்தும், அனைத்து ரெயில்களையும் ஏ லைன் வழியாக 12 மணிநேரம் திருப்பி விடப்பட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 60 அடி அகலமும், 20 அடி உயரத்துடனும் சுரங்கபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுவதும் இந்த மாதத்துக்குள் முடிந்துவிடும்.

இந்த சுரங்கபால பணிகள் முடிந்ததும், ஏ லைன் பகுதியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மற்றொரு சுரங்க பாலம் அமைக்கும் பணி தொடங்கும்.

தென் இந்திய ரெயில்வே சார்பில் யானைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முதல் சுரங்க பாலம் இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிரந்தர தடுப்பு நடவடிக்கை

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அடர்ந்த வனப்பகுதியை நோக்கி யானைகள் நடமாடுவதால் எட்டிமடை மற்றும்வாளையார் இடையே தண்டவாளத்தை அடிக்கடி யானைகள் கடந்து செல்கின்றன.

வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை ஆகியவற்றை தின்பதற்காக இவை கடந்து செல்கின்றன. சுரங்கபாலம் மூலம் கடந்து செல்லும் போது யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

ரெயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், கொங்கு குளோபல் அமைப்பின் இயக்குனருமான சதீஷ்குமார் கூறும்போது,

"ரெயிலில் யானைகள் அடிபடுவதை தடுக்க பி வழித்தடத்தில் நிரந்தரமாக ரெயில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு ஏ வழித்தடம் அருகில் உயர்மட்ட பாதை அமைப்பதே நிரந்தர தீர்வு ஆகும் "என்று கூறினார்.

மேலும் செய்திகள்