சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்
அரக்கோணத்தில் சாலையின் நடுவில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரக்கோணம் - சோளிங்கர் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்திற்கும், ரெயில் நிலையத்திற்கும் செல்லும் சாலையில் அரசு, தனியார் வங்கிகளும் உள்ளன. போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகளவில் உள்ள இந்த சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகள் உள்ள பகுதியின் அருகே திடீரென்று பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதி சேதமடைந்து வட்ட வடிவில் ஆள் உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை பணி முடிந்த பிறகு அதனை சரியாக நிரப்பாமல் தார் சாலை போட்டுள்ளனர். அதனால் தான் சாலையின் நடுவே பள்ளம் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இந்த வழியாக நடந்து செல்பவர்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் தவறி விழும் சம்பவம் நடக்கிறது. இந்த பள்ளத்தை சரி செய்ய இது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. பெரும் விபத்துகள் ஏற்படும் முன் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.