உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தி உறவினர்கள் போராட்டம்

ஜார்கண்டில் நடந்த விபத்தில் கள்ளக் குறிச்சிைய சேர்ந்த லாரி கிளீனர் பலியானார். அவரது உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூர் காலனியை சேர்ந்தவர் அழகேசன் மகன் மணிகண்டன்(வயது 22). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாமக்கல்லில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு மணிகண்டன், ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றார். ஜார்கண்டில் மணிகண்டன், லாரியை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான புத்தந்தூருக்கு வந்தது.

போராட்டம்

அப்போது கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமாந்தூரில் மணிகண்டனின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தி உறவினர்கள் மற்றும் காலனி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறுகையில், மணிகண்டன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்குப்பதிவு செய்த நகல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்