சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

அரசு பள்ளி கட்டிடம் ஒழுகுவதால் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-07-25 00:45 IST


பொள்ளாச்சி

அரசு பள்ளி கட்டிடம் ஒழுகுவதால் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலுக்கு முயற்சி

பொள்ளாச்சி அருகே கெட்டிமல்லன்புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 67 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் 2 கட்டிடங்களில் பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தின் ஓடு நேற்று மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று நஞ்சேகவுண்டன்புதூருக்கு வந்து மீன்கரை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தெற்கு ஒன்றிய அதிகாரிகள் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கட்டிடம் சீரமைக்கப்படும்

அப்போது பெற்றோர்கள், பள்ளிக்கு ஏற்கனவே கட்டப்பட்ட புதிய கட்டிடமும் தரமாக இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து உள்ளதால் மழைநீர் வகுப்பறைகளுக்குள் ஒழுகுகிறது. இதற்கிடையில் ஓடு காற்றுக்கு கீழே விழுந்து உடைகின்றன. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர் என்றனர்.

இதற்கு அதிகாரிகள் தரப்பில், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க மண்ணை கொட்டி சமப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய கட்டிடம் கட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்