வெளிமாநில தொழிலாளர்களை பதிவு செய்யசிறப்பு ஆலோசனை கூட்டம்
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்வது குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.;
தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம், தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், தேனி, பெரியகுளம், போடி, கம்பம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், கடைகள், உணவு நிறுவன வணிகர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை விடுதல் இன்றி பதிவு செய்ய வேண்டும்.
தொழிலாளர்களுக்கு இருப்பிடம், பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன முகாமில், உதவி ஆணையர் சிவக்குமார் பேசும்போது, 'வெளிமாநில தொழிலாளர்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்காக நாளை (திங்கட்கிழமை) தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்யலாம்' என்றார்.