கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2023-05-07 19:00 GMT

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த சீசன் தற்போது குளிர் சீசனாக மாறி உள்ளது. கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும், குளிரும் நிலவுகிறது. இந்த சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வந்தனர். கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

அணிவகுத்த வாகனங்கள்

ஒரேநேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதை, நகரின் முக்கிய இடங்கள், சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அதன்பிறகு சுற்றுலா வாகனங்கள், சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

குளிர்ச்சியான சூழல்

இதற்கிடையே கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மலைப்பகுதியில் நிலவிய குளிர்ச்சியான சூழலையும், அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கிய தருணத்தையும் அனுபவித்தவாறு சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.

மோயர்பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், கோக்கர்ஸ்வாக், டால்பின்நோஸ், குணாகுகை, பேரிஜம் ஏரி பகுதி, மதிகெட்டான் சோலை, மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மேலும் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எழில்கொஞ்சும் அந்த காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

படகு சவாரி

இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்துடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். கொடைக்கானலில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

சாலையின் குறுக்கே விழுந்த மரம்

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம்டம் பாறை பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அப்போது சுற்றுலா பஸ் ஒன்று அங்கு வந்தது. அந்த பஸ் மரம் விழுந்த பகுதியை கடந்து சென்ற முயன்றபோது, மரக்கிளை பஸ்சின் ஜன்னலில் மாட்டிக்கொண்டது. பின்னர் அந்த பஸ்சில் இருந்தவர்கள் மரக்கிளையை அகற்றினர். அதன்பிறகு அந்த பஸ் கொடைக்கானல் நோக்கி சென்றது.

மேலும் சம்பவ இடத்துக்கு வனத்துறை, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வந்து, மரத்தை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. 

Tags:    

மேலும் செய்திகள்