கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு - அன்புமணி கண்டனம்

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-19 11:40 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வடசென்னை தண்டையார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமக்கு சொந்தமான தானியில் 5 பேர் கஞ்சா அடித்துக் கொண்டிருந்ததை தட்டிக் கேட்ட ராஜ்குமார் என்பவரை கஞ்சா போதையிலிருந்த ஐவரும் தங்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் வட்ட செயலாளராக பணியாற்றி வரும் அவர் விரைவில் முழு குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூரை 15 வயது சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்ததைப் பார்த்த 11 வயது சிறுவர்கள் இருவர் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை மாணவர்கள் இரு சிறுவர்களையும் இழுத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் 15 வயது சிறுவர்கள் கூட கஞ்சா புகைக்கும் அளவுக்கு மாநிலம் முழுவதும் கஞ்சா நீக்கமற நிறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் பொது இடங்களில் துணிச்சலாக கஞ்சா புகைப்பதும், அதை தட்டிக் கேட்பவர்களை அரிவாளால் வெட்டுவதும் சாதாரணமாகிவிட்டது. இவற்றைப் பார்க்கும் போது கஞ்சா பழக்கத்தின் விளைவாக தமிழ்நாடு எவ்வளவு ஆபத்தான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.

கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் குழந்தைகளுக்குக் கூட எளிதாக கிடைப்பதும், அவற்றின் வணிகத்தைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் தான் இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும். இதற்காக தமிழகத்தை ஆளும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழகத்தின் இன்றைய கஞ்சா சீரழிவுகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் தீய தாக்கத்திலிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றும்படி திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாகவே வலியுறுத்தி வருகிறேன். ஆனாலும் போதைப்பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. போதைக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்