பாரம்பரிய உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சி
தலைஞாயிறு அருகே பாரம்பரிய உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சி நடந்தது.;
வாய்மேடு:
தலைஞாயிறு அருகே பாரம்பரிய உம்பளச்சேரி மாடுகள் கண்காட்சி நடந்தது.
உம்பளச்சேரி மாடுகள்
உம்பளச்சேரி இன மாடுகள் சிறப்பு வாய்ந்தது. உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப்புல் என்னும் ஒரு வகை புல் விளைந்து வருகிறது.. இந்தப் புல்களில் அதிக அளவு உப்பு சத்து இருக்கும்.
இந்த புல்லை மேய்ந்து இந்த இன மாடுகள் விருத்தி அடைந்ததால், இந்த மாடுகளுக்கு உம்பளச்சேரி என்ற பெயர் வந்தது. இந்த வகை மாடுகள் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் காணப்படுகிறது. 2013-ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி 72 ஆயிரத்து 510 உம்பளச்சேரி மாடுகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லிட்டர் பால் தரும்
இந்த இன மாடுகள் சேற்றில் உழவு செய்ய ஏதுவாக குட்டையாகவும், நடுத்தரமான உடல் அமைப்பையுடன் காணப்படுகிறது. கருஞ்சாம்பல் நிறத்துடனும், நெற்றியில் தனித்தன்மை வாய்ந்த வெள்ளை நிற நட்சத்திர அடையாளத்துடன் உம்பளச்சேரி மாடுகள் காணப்படும். உம்பளச்சேரி பசுக்கள் தினமும் அரை லிட்டர் முதல் 2 லிட்டர் வரை பால் தரும்.
சேற்று உழவில் மற்ற இன மாடுகளை விட வேகமாக செல்லும். கடுமையான மழை மற்றும் வெயிலை தாங்க கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. வேளாண்மையில் எந்திரங்களின் வருகையால் உழவுமாடுகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. செயற்கை முறை கருவூட்டலால் பொலி காளைகளும் காணாமல் போய்விட்டன. மாடு வளர்ப்போரும் வருமானத்திற்காக கலப்பினங்களை வளர்க்க தொடங்கி விட்டனர்.
கண்காட்சி
இதனால் உம்பளச்சேரி இன மாடுகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உம்பளச்சேரி கால்நடை பண்ணையை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொறுக்கை என்ற இடத்தில் அமைத்து உம்பளச்சேரி மாடுகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பாரம்பரிய உம்பளச்சேரி இன மாடுகள் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் நர்மதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரவி வரவேற்றார். கால்நடை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி இயக்குனர் ஹசன் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் 239 மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.. இதில் ஆய்மூர், துளசாபுரம், கள்ளிமேடு, சாக்கை, வாடாக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து மாடுகள் இடம் பெற்றிருந்தன.
பரிசுகள் வழங்கப்பட்டன
இந்த கண்காட்சியில் சிறந்த பசுமாடுகள், காளைகள், கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு முகாமில் மாடுகளுக்கு சினை ஊசிகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டன.
இதில் உம்பளச்சேரி பாரம்பரிய கால்நடை வளர்ப்பு சங்க செயலாளர் தீனதயாளன், தலைவர் ராஜகோபால், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கால்நடை டாக்டர் செந்தில் நன்றி கூறினார்.