மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-07-16 07:27 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலங்கள் உடைந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யாவிட்டாலும், லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலை 6.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் மழை மற்றும் காற்றின் காரணமாக சீகை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாளால் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்