காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2023-07-07 19:33 GMT

சென்னை,

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்கவும், அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சி. விஜயகுமார், I.P.S. தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். பல முக்கியமான வழக்குகளை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர் விஜயகுமார். இவரது மறைவு காவல் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. மறைந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், தனது வீட்டில் பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியினைப் பார்க்கும்போது, பணிச்சுமையும், மன உளைச்சலும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடவும், காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்கவும், அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்