மருந்தாளுனர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

வேட்டைக்காரன் புதூர் சித்த மருத்துவமனையில் மருந்தாளுனர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.;

Update:2023-06-04 01:00 IST

ஆனைமலை

வேட்டைக்காரன் புதூர் சித்த மருத்துவமனையில் மருந்தாளுனர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சித்த மருத்துவமனை

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா, தியான அறைகள் மற்றும் திருமூலர் மூலிகை பண்ணை செயல்படுகிறது. இதில் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த சித்த மருத்துவமனையில் மருந்தாளுனர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதனால் நோயாளிகளை பரிசோதிப்பது, மூலிகைகள் பறித்துக்கொடுப்பது, சித்த மருத்துவ விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மருத்துவர் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால் கூடுதல் பணிச்சுமையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

கவுன்சிலிங் முறை

இதுகுறித்து ஆனைமலை பொதுமக்கள் கூறும்போது, போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், ஏற்கனவே இருந்த மருந்தாளுனர் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இதுவரை புதிய மருந்தாளுனர் நியமிக்கப்படவில்லை.

மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள பணியாளர்களும் இல்லை. அங்குள்ள மூலிகை பண்ணை பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. மேலும் வளாகத்தை சுற்றி குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கிறது என்றனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறுகையில், வேட்டைக்காரன் புதூர் அரசு சித்த மருத்துவமனையில் ஆனைமலை மற்றும் கஞ்சம்பட்டி மருந்தாளுனர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுகின்றனர்.

வரும் நாட்களில் கவுன்சிலிங் முறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்