கடலூா் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

Update: 2023-07-10 18:45 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வெயில் அதிகமாக இருந்தது. கடலூரில் தொடர்ந்து 2 நாட்கள் 100.4 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை முதலே சூரியன் சுட்டெரித்து வந்ததால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்பட்டனர்.

இதற்கிடையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று கடலூரில் அவ்வப்போது வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது.

மழை

சற்று நேரத்தில் மழை பெய்த தொடங்கியது. தொடர்ந்து கன மழை பெய்தது. இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்த சென்ற மாணவ-மாணவிகள் நனைந்தபடி சென்றனர். இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சிலர் மழையில் குடைபிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் சென்றனர். அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காகவும், நடைபயிற்சிக்காகவும் வந்த வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஒருசிலர் மட்டும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விளையாடினர். மேலும் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக சாலையோரம் மாலை நேர கடைகள் வைத்தவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

தண்ணீர் தேங்கியது

இதேபோல் வடலூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, திட்டக்குடி, ராமநத்தம், புதுப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் காற்றுடன் கூடிய கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்