நவமலையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்
நவமலையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க ஆழியாறு அணைக்கு யானைகள் வருகின்றன. அவை நவமலை ரோட்டிலும் சுற்றித்திரிகின்றன.
இந்த நிலையில் அங்கு முகாமிட்டு இருந்த யானை கூட்டத்தை விரட்டும்போது, ஒரு யானை மட்டும் வனத்துறையினரை நோக்கி வந்து, பயங்கர சத்தத்துடன் பிளறிக்கொண்டு திரும்பி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, நவமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் அவசியம் இல்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி நவமலை பகுதிக்கு செல்வதை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.