அணைக்கட்டு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா?
அணைக்கட்டு பகுதியில் 3 ஆடுகளை காணவில்லை. 5 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. இதனால் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
பூனையை கடித்து குதறியது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மற்றும் ஊணைபள்ளதூர் கிராமங்கள் மலையை ஒட்டி உள்ளன. இந்தப் பகுதியில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அதிகாலை சுப்பிரமணி என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை வாசலில் இறந்து கிடந்தது.
வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை பார்த்தபோது சிறுத்தை வடிவிலான ஒரு விலங்கு பூனையை கடித்து குதறுவது பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த வனத்துறையினர் பூனையை கடித்து குதறியது சிறுத்தை அல்ல எனவும், அதே உருவத்தில் உள்ள காட்டு பூனையாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆடுகள் மாயம்
ஊனைப்பகுதியை சேர்ந்த ஆதி என்பவர் 15 ஆடுகள் அந்த பகுதியில் வளர்த்து வருகிறார். அதில் ஆடுகள் காணாமல் போய் உள்ளதாகவும் மேலும் 5 ஆடுகள் பலத்த காயங்களுடன் கிடந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்தப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனத்துறை அதிகாரிகள் கூறிவருகின்றனர்.