கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுமா?
அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை பிரிவுகளுடன் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கோத்தகிரி,
அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை பிரிவுகளுடன் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கோத்தகிரி மற்றும் 250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து நோயாளிகள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கான உள் நோயாளிகள் சிகிச்சை, வெளிநோயாளிகள், மகப்பேறு சிகிச்சை, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு முறிவு, காசநோய், ரத்த வங்கி, சலுகை கட்டணத்தில் சி.டி.ஸ்கேன் வசதி, சித்த பிரிவுகள் உள்ளன.
ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 400 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், விபத்துகளில் எலும்புமுறிவு ஏற்பட்டு காயமடைந்தவர்களுக்கு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டாக்டர் இல்லை
கோத்தகிரி ராஜா:-
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பணிபுரிந்த டாக்டர் மாறுதலாகி, வேறு மாவட்டத்துக்கு சென்றார். அதன் பின்னர் புதிய டாக்டர் நியமிக்கப்பட வில்லை. கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் வாரத்திற்கு ஒரு முறை (அதாவது திங்கட்கிழமை) மட்டும் அரசு ஆஸ்பத்திரி சித்த பிரிவிற்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
மற்ற நாட்களில் பார்மசிஸ்ட் மட்டுமே பணியில் இருக்கிறார். ஏற்கனவே டாக்டரிடம் ஆலோசனை பெற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்குகிறார். இதனால் மற்ற நாட்களில் சித்த சிகிச்சை பெற வரும் நோயாளிகள், டாக்டர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி சித்த பிரிவிற்கு நிரந்தரமாக டாக்டரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்புகள் வேண்டும்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் மாநில துணை தலைவர் ராஜன்:- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி நடைபெற உள்ளது. இருப்பினும், பழமையான கட்டிடத்தில் போதிய வசதிகள் இன்றி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. எனவே, புதிய கட்டிடங்கள் கட்டி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். சமவெளி பகுதிகளில் இருந்து டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இங்கு குடியிருப்புகள் கட்டப்படாததால், மருத்துவமனையில் இருந்து தொலைவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.
எனவே, டாக்டர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வேண்டும். ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். ேமலும் சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்களை நியமிக்கவும், டாக்டர்களின் காலி பணியிடங்களை நிரப்பவும், கூடுதல் லேப் டெக்னீசியன்களை பணியமர்த்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய கட்டிடம்
கோத்தகிரி வாசுதேவன்:-
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் குறுகிய வளைவில் திரும்பி செல்வதில் சிரமம் உள்ளது. எனவே, ஆஸ்பத்திரிக்குள் எளிதாக செல்லும் வகையில் பஸ் நிலையத்தில் இருந்து நேராக செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே புதிய நுழைவுவாயில் அமைக்க வேண்டும்.
அன்பரசன்:-
ஆஸ்பத்திரியில் ஏற்கனவே குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் சி.டி.ஸ்கேன் எந்திரம் பொருத்தப்பட்டு, ஸ்கேன் மையமாக மாற்றப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், தடுப்பூசி போடுவதற்கும் தனியாக கட்டிடம் இல்லாததால் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு தனியாக கட்டிடம் கட்ட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து வசதிகளுடன் ஆஸ்பத்திரியை மேம்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.