புதுப்பிக்கப்பட்ட படகுகள் முன்பு பொங்கல் வைத்து மீனவர்கள் வழிபாடு
மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட படகுகள் முன்பு பொங்கல் வைத்து மீனவர்கள் வழிபாடு நடத்தினர்.;
தொண்டி,
மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட படகுகள் முன்பு பொங்கல் வைத்து மீனவர்கள் வழிபாடு நடத்தினர்.
பொங்கலிட்டு வழிபாடு
திருவாடானை தாலுகா தொண்டி, சோளியக்குடி, சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன்பிடித்தடை காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை கரையேற்றம் செய்து படகுகளை புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் என்ஜின் பழுது பார்த்தல், மர வேலைகள், வயரிங் வேலைகள் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீன்பிடி வலைகளை சீரமைத்தல், புதிதாக வலை பின்னுதல் போன்ற பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்கி முழுமையாக பராமரித்து கடலில் இறக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சிங்காரவேலர் நகர், லஞ்சியடி பகுதியில் கடந்த 2 மாதங்களில் தங்களது விசை படகுகளை முழுமையாக சீரமைத்துள்ள மீனவர்கள் படகுகளை கடலில் இறக்குவதற்காக சீரமைக்கப்பட்ட படகுகளுக்கு மாலை அணிவித்து கங்காதேவிக்கு பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்தினர், உறவினர்களுடன் இணைந்து இந்த ஆண்டு நல்ல முறையில் மீன்பிடி தொழில் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டு படகுகளை கடலில் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் நிவாரண தொகை
இது குறித்து விசைப்படகு உரிமையாளர் பால கங்காதரன் கூறியதாவது:- மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தடைக்காலத்தை பயன்படுத்தி இங்குள்ள அனைத்து படகுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசை படகுக்கும் பழுது நீக்குவதற்கு பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தடைக்காலத்திற்கு பின்னர் கடலுக்கு செல்லும் போது நல்ல மீன் பிடி தொழில் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் விசைப்படகு மீனவர்கள் படகுகளை சீரமைப்பதற்காக வட்டிக்கு வாங்கிய கடனை ஓரளவு அடைக்க முடியும். ஏற்றுமதி நிறுவனங்கள் எங்களிடம் கொள்முதல் செய்யும் இறால், நண்டு, கணவாய் போன்றவைகளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். தடைக்காலத்தில் அரசு வழங்கும் நிவாரண தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசும், கொள்முதல் நிறுவனங்களும் தடைக்காலத்திற்கு பின்னர் நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.