விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ரூ.28 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

விருத்தாசலத்தில் உாிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-05 02:21 GMT
விருத்தாசலம், 

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு விருத்தாசலம் அடுத்த வேப்பூர் கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

1,232 வெள்ளி பொருட்கள்

இதில் காரில் வெள்ளி கொலுசு, வளையல், மெட்டி உள்ளிட்ட 1,232 வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த சசிகுமார் (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்கள் இன்றி வெள்ளி பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.28 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் அங்கு கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் வையபாளையத்தை சேர்ந்த தர்மன் (40) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 86 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வந்தவரிடம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் இருந்தது. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கொடைக்கானலில் உரிய ஆவணங்கள் இன்றி கார்களில் கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.3 லட்சம் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் குன்னுர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பர்லியார் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குன்னூருக்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சில்வர் பாத்திரங்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதனைத்தொடர்ந்து லாரியில் கொண்டு வரப்பட்ட சில்வர் பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்