அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக மாறிவிட்டது: சீத்தாராம் யெச்சூரி

அ.தி.மு.க. ஆட்சியில் அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Update: 2021-03-06 01:20 GMT
பொதுக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இடையே அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக 15 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மறுபக்கத்தில் பெரும் பணக்காரர்களுக்கான வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் நிலையில் இந்தியாவின் 40 சதவீத மக்கள் மாதம் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவாக வருவாய் கிட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயத்தை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் 100 நாட்களை தொட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு விவசாயிகளிடம் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

நன்மை இல்லை
தமிழக அரசு, வறட்சி உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களுக்காக மத்திய அரசிடம் இதுவரை கேட்ட தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு வழங்கியுள்ள தொகை ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் மட்டுமே பா.ஜனதா அரசால் பலன் அடைந்திருக்கலாம். அ.தி.மு.க. அரசு மத்திய அரசு எதைச் சொன்னாலும் அதற்கு தலையாட்டும் அரசாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் ரூ.60 ஆயிரம் வரை கடன் சுமை உள்ளது.

மகத்தான பொறுப்பு
மத்திய அரசு வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணமான ரூ.8 லட்சம் கோடியை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி சலுகைகளையும் வழங்குகிறது. மறுபக்கத்தில் கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான வழி தெரியாமல் வேலை வாய்ப்பின்றி தவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பாற்றவும், அதன் மூலம் நாளைய இந்தியாவை பாதுகாக்கவும் கடமையாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக மக்களுக்கு உள்ளது. எனவே வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். தி.மு.க. தலைமையிலான ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய கூட்டணியை வெற்றி பெற செய்து தமிழகத்திற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க தமிழக மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்