100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு ஜனநாயக திருவிழா அழைப்பிதழ் வழங்கிய கலெக்டர்

தர்மபுரி இலக்கியம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு ஜனநாயக திருவிழா அழைப்பிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;

Update:2021-03-10 03:49 IST
தர்மபுரி, 

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனநாயக திருவிழா அழைப்பிதழ் மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்டது.

இதில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற மன உறுதியுடன் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகா அழைப்பு விடுப்பது போல் அந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் வழங்கினார்

தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகர் பகுதியில் மங்கள இசை முழங்க, பழங்கள், வெற்றிலை, பாக்கு, தாம்பூல தட்டில் ஜனநாயக திருவிழா அழைப்பிதழுடன் வைத்து கலெக்டர் கார்த்திகா வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலெக்டருடன் கலந்துகொண்டு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ்களை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்