சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சிறப்பு செலவீன பார்வையாளர் முன்னிலையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2021-03-09 23:13 GMT
சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. தற்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இந்த காலகட்டத்தில் வேட்பாளர்கள், வரையறுக்கப்பட்ட செலவுத்தொகைக்கு உட்பட்டு செலவழிக்கிறார்களா? வரம்பு மீறி செலவு செய்கிறார்களா? ஒவ்வொரு கூட்டம், ஊர்வலம், பிரசாரத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு? என்பது போன்ற கணக்கீடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

முற்றுப்புள்ளி இல்லை

இவை தவிர, முக்கியமாக வாக்காளர்களை கவர்வதற்கான நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபடுகிறார்களா? என்பதையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். அதன்படி, பரிசுப்பொருட்கள் வழங்குவது, பணப்பட்டுவாடா செய்வது போன்ற தேர்தல் விதிகளை மீறிய நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் கவனிக்கும்.

தமிழகத்தில் தேர்தலின்போதெல்லாம் ஏராளமான அளவில் பணம், பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வழங்குவது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இதுவரை எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வழக்குகள் தாக்கல் செய்தாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

புதிய முயற்சி

எனவே இந்த தேர்தலில் புதிய முயற்சியாக 2 சிறப்பு செலவீன பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் களம் இறக்கியுள்ளது.

இதன்படி நியமிக்கப்பட்ட சிறப்பு செலவீன பார்வையாளர்களான மது மகாஜன், பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள்) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

ஆலோசனை

இதனையடுத்து தேர்தலில் பணப்பட்டுவாடா நடவடிக்கைகளை ஒடுக்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் 12.15 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்கு நிறைவடைந்தது.

அமலாக்க அதிகாரிகள்

தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான அமலாக்க பணிகளுக்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ள வருமான வரித்துறை, சுங்கத் துறை, வணிகவரித் துறை, துணை ராணுவப் படை, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளின் தலைமை ஒருங்கிணைப்பு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

யார், யார் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்? எந்தெந்த வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதற்கான ஆலோசனைகளை சிறப்பு செலவீன பார்வையாளர்கள் வழங்கினர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக ரொக்கப்பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வாரியாக வாகன சோதனைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் ஜி பே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்