அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.வின் விலகல் முடிவுக்கு பா.ம.க. காரணம் என்பதா? ஜி.கே.மணி கண்டனம்

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.வின் விலகல் முடிவுக்கு பா.ம.க. காரணம் என்பதா? ஜி.கே.மணி கண்டனம்.

Update: 2021-03-11 22:11 GMT
சென்னை, 

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டியது இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு சமூகநீதியை காத்து வருகிறது. 40 ஆண்டுகால எங்களது போராட்டத்துக்கு அ.தி.மு.க. அரசு தான் தீர்வை தந்திருக்கிறது. அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் சாதாரண மக்களையும் கவரும் வகையில் இருக்கிறது. நிச்சயம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு அலை இல்லை. இதுவும் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகி சென்றதற்கு பா.ம.க. காரணம் கிடையாது. நாங்கள் எந்த இடத்திலும் தே.மு.தி.க. மீது எந்தவிதமான விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. எனவே இப்படி கூறப்படுவது தவறு ஆகும்.

இலவசங்களை எதிர்க்கும் கட்சிதான் பா.ம.க. அதேவேளை மக்களுக்கு பயனுள்ள அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படுவதில் எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. வழக்கமாகவே தேர்தல் காலங்களில் வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் தலைதூக்கும். தற்போதைய சிறப்பான ஆட்சி காரணமாக அந்தமாதிரி பிரச்சினைகள் இந்தமுறை எழவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்