அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ராஜவர்மன் எம்.எல்.ஏ., அ.ம.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் எம்.எல்.ஏ. அ.ம.மு.க.வில் இணைந்தார். ஆண்டவனாலும் இனி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியாது என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-11 23:02 GMT
சென்னை, 

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம்வெளியானது. இதில் சாத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராஜவர்மனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாத்தூர் தொகுதிக்கு ஆர்.கே.ரவிச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ. நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து, தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். ராஜவர்மன் ஆதரவாளர்கள் சிலரும், அ.ம.மு.க.வில் இணைந்தனர்.

ஆதங்கம்

இதையடுத்து ராஜவர்மன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான் என் ஆதங்கம். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அதிகாரம், அக்கிரமம் காரணமாகத்தான் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.டி.ராஜேந்திர பாலாஜியை வைத்து அ.தி.மு.க.வா? அ.தி.மு.க.வை வைத்து கே.டி.ராஜேந்திர பாலாஜியா? அவருக்கு செல்வாக்கு இருக்கிறதா?

சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுவிட்டால், எனக்கு அரசியல் வாழ்க்கையே வேண்டாம். ராஜபாளையத்துக்கு ஏன் ஓடுகிறார்? சாத்தூர் தொகுதியில் கட்சிக்கே உழைக்காத ஒருவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்? சட்டசபை தேர்தல் முடிந்த உடன் ஆட்சியை நிர்ணயிக்கும் இடத்தில் டி.டி.வி.தினகரன் இருப்பார்.

ஜெயலலிதா உற்சவர், சசிகலா மூலவர்

ஆண்டவனாலும் இனி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியாது. சசிகலா ஒருவரால் தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். ஜெயலலிதா உற்சவர். சசிகலா மூலவர். ஜெயலலிதா வரும்போது அவர்கள் கும்பிடுவார்கள்.

உள்ளே, மூலவரில் இருந்து இயக்கியவர் தான் சசிகலா. சசிகலா தான் அ.தி.மு.க.வையும், ஜெயலலிதாவையும் இயக்கினார். இதனை ஊர் அறியும். தமிழக மக்கள் துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விசுவாசத்தை மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்