திமுக ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்திற்கு அதிமுக அரசு ஒளியேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
திமுக ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்திற்கு அதிமுக அரசு ஒளியேற்றியுள்ளது என தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக ஆட்சியில் விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகம்.
இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
தமிழகம் சரியாக திசையை நோக்கி பயணித்து வருகின்றது. நான் முதல்வராகப் பதவியேற்று 4 வருடம் 2 மாதம் ஆகின்றது. அப்போது, நான் நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றியுள்ளேன். ஆனால், இந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியை கலைக்கவும், கட்சியை உடைக்கவும் ஸ்டாலின் திட்டம் தீட்டினார். அந்த திட்டம் தொண்டர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்டது.
வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியை கலைக்க, கட்சியை உடைக்க சூழ்ச்சித் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தீட்டிக் கொண்டிருந்தார். அதனை தொண்டர்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கி உள்ளோம். அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பச்சைப் பொய்கள் என்றும் அவர் கூறினார்.