சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்

சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்.

Update: 2021-03-23 20:49 GMT
சென்னை, 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் திட்டக்குடி (தனி) தொகுதியில் மண்டல அமைப்புச் செயலாளர் சு.திருமாறன் என்கிற அய்யாசாமி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக மனுவைத் திரும்பப் பெற தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், அவர் திரும்பப் பெறாமல், சுயேச்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராகப் போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்.

அத்துடன் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிக்கையாகும். கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டல செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்