தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சிக்கானது கே.எஸ்.அழகிரி பேச்சு
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சிக்கானது என கே.எஸ்.அழகிரி பேசினார்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து, நேற்று வேலூர் சேண்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் சிறந்த பொருளாதார கொள்கையை உருவாக்கி ஜப்பான், தென்கொரியா நாடுகளை போன்று தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நல்ல பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 50 சதவீதம் லாபம் கொடுத்து அதனை அரசு கொள்முதல் செய்யும்.
தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழக அரசு ரூ.7 லட்சம் கோடி கடனில் உள்ளது. இப்படி கடனில் இருக்கும் ஒரு ஆட்சி எப்படி வேலைவாய்ப்பை கொடுக்க முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும், வாஷிங்மிஷின் தரப்படும் என்கிறார். இதை நிறைவேற்ற முடியாது. மக்களை குழப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து உள்ளார். அதில் ஒன்றைக்கூட அவரால் நிறைவேற்ற முடியாது.
தமிழக வளர்ச்சிக்கானது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் ஏன் நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அறிவித்துள்ளார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விலைவாசி குறைக்கப்படும். தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை தமிழக வளர்ச்சிக்கானது.
மத்தியில் உள்ள அரசு ஒரே நாடு, ஒரே கலாசாரம் கொண்டு வர நினைக்கிறது. இதனால் பல மாநில மக்களின் அடையாளத்தை மாற்ற நினைக்கிறது. இதை தடுக்க தமிழகம் வளர்ச்சி அடைய தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.