கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று துவக்கினார்.

Update: 2021-03-24 23:10 GMT
கும்மிடிப்பூண்டி,

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் டில்லியை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை எப்போதும் விஜயகாந்த் தொடங்குவது வழக்கம். ஏற்கனவே தே.மு.தி.க. 2005-ம் ஆண்டு துவங்கப்பட்ட போது, முதன்முதலில் தனது பிரசாரத்தை கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஆரம்பாக்கத்தில் தான் அவர் துவக்கினார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் அ.தி.மு.க. கூட்டணியில, தே.மு.தி.க. இடம்பெற்ற போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை ஜெயலலிதாவிடம் கடைசி நேரத்தில் கேட்டு பெற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்.

வாக்கு சேகரிப்பு

இந்த நிலையில், இந்த தேர்தலிலும் கும்மிடிப்பூண்டியில் தனது முதல் தேர்தல் பிரசாரம் இருந்திட வேண்டும் என்ற நோக்கில் விஜயகாந்தின் இந்த பிரசார பயணம் திட்டமிடப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிரசார வேனில் நின்றவாறு பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் பார்த்து கும்பிட்டும், கை அசைத்தும் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடல் நிலை காரணமாக தொடர்ந்து பிரசார வேனில் நிற்க முடியாத சூழலில் சிறிது நேரத்திற்கு பிறகு வேனில் அமர்ந்தவாறு அனைவரையும் பார்த்து கையசைத்தவாறு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் நேற்று அவர் கும்மிடிப்பூண்டியை தவிர வேறு எங்கும் தனது பிரசார பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்