தலைவர்கள் போட்டி பிரசாரம்: கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் தீவிர ஓட்டுவேட்டை

மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் நேற்று போட்டி பிரசாரம் செய்தனர்.

Update: 2021-03-28 20:18 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார களம் கொளுத்தும் கோடை வெயிலை காட்டிலும் சூடு பிடித்திருக்கிறது. தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இடைவிடாமல் அரங்கேறி வருகிறது. டெல்லியில் இருந்தும் தேசிய கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள் தமிழகம் நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

அதேநேரத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் இருவரும் நேற்று போட்டி பிரசாரம் செய்தனர். அதன்படி மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் சேலம் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்தனர்.

விவாதிக்க தயார்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க. ஊழல் செய்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். இருக்கட்டும். இதே கொளத்தூருக்கே நான் வருகிறேன். மு.க.ஸ்டாலினும் வரட்டும். ஒரு மேடை போடுங்கள். ஆனது ஆகட்டும். இருவரும் மைக் பிடித்து பேசுகிறோம். எந்த துறையில் ஊழல் என்று சொல்லட்டும். நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு கூறட்டும். அதேபோல தி.மு.க. ஆட்சியில் நீங்கள் என்னென்ன தவறு செய்தீர்கள்? என்று நாங்களும் கேட்போம். பதில் சொல்லவேண்டும்’’ என்று ஆவேசமாக பேசினார்.

எடப்பாடியில் மு.க.ஸ்டாலின்

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிடும் சம்பத்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்