மணப்பாறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல் வருமான வரித்துறையினர் அதிரடி

மணப்பாறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் இருந்து ரூ.1 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-29 22:20 GMT
மணப்பாறை,

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும்படையினர் வாகன பரிசோதனைகள் செய்து கணக்கில் வராத பணம், நகைகள், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள், அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாருக்கு பணப்பட்டுவாடா

சில நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதியில் சாலையோரம் சாக்குமூட்டையில் கிடந்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் எதிரொலியாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக வந்த தகவலையடுத்து போலீஸ் நிலையங்களில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீடு

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் இருந்து ரூ.1 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி வலசுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 38). இவர் மணப்பாறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரிடம் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

3 இடங்களில் சோதனை

அதன்பேரில் திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் மதன்குமார் தலைமையில் 3 கார்களில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வலசுப்பட்டிக்கு சென்றனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து தங்களது சோதனையை தொடங்கினர். ஒரு குழுவினர் அதே பகுதியில் உள்ள தங்கபாண்டியன் என்பவரின் வீட்டிற்கும், மற்றொரு குழுவினர் அழகர்சாமி வீட்டிற்கும், இன்னொரு குழுவை சேர்ந்தவர்கள் கொண்டையம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது வீட்டிற்கும் சென்று அதிரடி சோதனையை தொடங்கினர்.

3 பேரின் வீடுகளிலும் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அழகர்சாமி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.1 கோடி பறிமுதல்

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் எண்ணிப் பார்த்த போது 500 ரூபாய் நோட்டுகள் 20 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1 கோடி இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கபாண்டியன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரின் வீடுகளிலும் பணம் உள்பட எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து வருமான வரித்துறை சட்டத்தின்படி கணக்கில் காட்டாத வகையில் ரூ.1 கோடி வைத்திருந்ததாக அழகர்சாமி மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அட்டைப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்து எடுத்துச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த சோதனை நேற்று அதிகாலை சுமார் 4.50 மணி வரை நீடித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்