பெண்கள் மீது அக்கறை இருந்தால் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற தயாரா? பிரதமர் மோடிக்கு டி.ராஜா கேள்வி

பெண்கள் மீது அக்கறை இருந்தால் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற தயாரா? என்று பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2021-04-01 04:30 IST
திருப்பூர், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா திருப்பூரில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெறுகிற தேர்தல் நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்சியில் இருக்கிற அ.தி.மு.க., பா.ஜனதா கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியின் படுதோல்வி, இந்திய அளவில் மத்திய ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை என்பதற்கு பதிலாக விரக்தி தலைதூக்கி உள்ளது.

தமிழகத்தில் ஏற்படுகிற தோல்வி மத்தியில் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான வெற்றியை அளிக்க போகிறார்கள். அ.தி.மு.க.வின் அதிகாரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்களே அரசியல் கட்சிகளுக்கு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. அணி மகத்தான வெற்றி பெறும்.

பொருளாதார வீழ்ச்சி

பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுகிறார். மோடி பிரதமர் ஆனபிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடி பேசுகிற வளர்ச்சி என்பது குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியாக இருக்கிறது. சுயசார்பு பெற்ற இந்தியா என்று மோடி பேசுகிறார். ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும், அன்னிய முதலீட்டையும் சார்ந்து நிற்கிற நாடாக இருக்கிறது.

அ.தி.மு.க. அரசு மாநில உரிமைகளை, நலன்களை காப்பாற்றுவதற்கு தவறிவிட்டது. மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரசாக தமிழக அரசு உள்ளது. அ.தி.மு.க. அரசு இனியும் தொடரக்கூடாது என்று மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதன்காரணமாக சட்டமன்ற தேர்தல் தமிழகத்துக்கு மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் பெரும் அரசியல் மாற்றத்துக்கு வழிகோலும் தேர்தலாக அமைந்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜனதா அணி படுதோல்வியை சந்திக்கும்.

மோடி பாசாங்கு காட்டக்கூடாது

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, பெண்களை அவமதிக்கிறது என்று கூறும் பிரதமர் மோடியின் பேச்சை ஏற்க முடியாது. அது கண்டனத்தோடு நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. பெண்களுக்கான சமூகநீதி, பெண்கள் விடுதலைக்காக போராடிய மாநிலம் தமிழகம். மோடிக்கு பெண்கள் குறித்து அக்கறை இருக்குமென்றால் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து இடதுசாரிகள் பல்வேறு மகளிர் இயக்கங்கள் போராடி வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்களவையில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இதைப்பயன்படுத்தி தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களை உருவாக்குகிறார்கள். பெண்களுக்கு ஆதரவான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தயாரா?. இதை ஏன் மோடி பேச மறுக்கிறார்.

பெண்கள் சமத்துவத்துக்காக, பெண்கள் உரிமைக்காக நிற்பவர் போல் தமிழகத்தில் மோடி பாசாங்கு காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்