கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிக்கபட்டு உள்ளது;
லண்டன்:
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறிவருகின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இது மலிவாகவும் கிடைக்கும் என கூறி உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான ஸ்டீராய்டு மருந்து டெக்ஸாமெதாசோனின் குறைந்த அளவுகளை வழங்குவது, மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளதாக சோதனை முடிவுகள் தெரிவித்து உள்ளன.
ரெகவரி என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த சோதனையை நடத்தி உள்ளது."ஒரு பெரிய முன்னேற்றம்" என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து உடனடியாக தரமான ஒரு மருந்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சோதனை குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறியதாவது:-
கொரோனா பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர்களில் அல்லது ஆக்ஸிஜனில் இருக்கும் நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டால், அது உயிர்களைக் காப்பாற்றும், மேலும் இதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். இதுவரை கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. இது பெரிய முன்னேற்றம் என்று இந்த தெரிவித்துள்ளார்.
இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அரசு அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில்,இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம், நமது விஞ்ஞானிகள் நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தேசிய சுகாதார சேவையின் ஸ்டீபன் பவிஸ் கூறுகையில் இது நல்ல மாற்றம், கொரோனா நோயாளிகளை பிரித்தானியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும்.வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது. பல ஆண்டுகளாகும் என்றும் இருந்த நிலையில் மிக விரைவாக நல்ல தீர்வு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது.டெக்ஸாமெதோசான்' எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், ஒவ்வாமைக்கும் பயன்படக் கூடியது. அதுவும் 6 பவுண்ட் செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.