வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நான்... புகைப்படம் வெளியிட்ட டிரம்ப்

வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது டிரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.;

Update:2026-01-12 09:59 IST

நியூயார்க்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். இது உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

வெனிசுலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று காட்சியளித்தது.

ஆனால் அதில், அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது ஜனாதிபதி என்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளதுடன், வெனிசுலாவின் பொறுப்பு (தற்காலிக) ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எதுவும் தலைப்பு வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ டிரம்ப் பகிரவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது டிரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்