பெல்ஜியத்தில் திருவிழா ஊர்வலத்துக்குள் கார் புகுந்து 6 பேர் பலி

பெல்ஜியம் நாட்டில் திருவிழா ஊர்வலத்துக்குள் கார் புகுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-03-20 20:28 GMT
பிரஸ்சல்ஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் தினத்துக்கு முன்பாக ‘கார்னிவல்’ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக கார்னிவல் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கார்னிவல் திருவிழா கலைக்கட்ட தொடங்கி உள்ளன.

அந்த வகையில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்சல்சில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரமான ஸ்ட்ரெபி-பிராக்வெக்னிஸ் நகரில் நேற்று காலை கார்னிவல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் அலங்கார ஆடைகளை அணிந்தும், மாறு வேடங்கள் தரித்தும் ஆடி, பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இப்படி திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தனர்.

அப்போது ஊர்வலம் சென்று கொண்டிருந்த அதே சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அந்த கார் ஊர்வலத்துக்குள் புகுந்தது.

கார் அதிவேகத்தில் மோதியதில் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இன்னும் சிலர் கார் சக்கரங்களில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. ஊர்வலத்தில் ஆடி,பாடி மகிழ்ச்சியாக இருந்த அனைவரும் பயத்தில் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே கார் ஊர்வலத்துக்குள் புகும் முன் அந்த காரை போலீசார் விரட்டி வந்ததாகவும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க காரை அதிவேகத்தில் ஓட்டியதால் இந்த விபரீதம் நேர்ந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விபத்துக்கு பின் காருடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்