பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-29 12:17 GMT

நியூயார்க்,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இதனை முன்னிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் கோடீசுவரரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு அடிக்கடி புகழாரம் தெரிவித்து வரும் அவர், வெளியிட்டு உள்ள செய்தியில், மன் கி பாத் நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற விசயங்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது.

100-வது நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார். மற்றொரு வரலாற்று மைல்கல்லாக, இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்