ரஷியாவில் கொடூர தாக்குதல்: அரை கம்பத்தில் தேசிய கொடி; மெழுகுவர்த்தி ஏற்றி அதிபர் புதின் அஞ்சலி

ரஷியாவில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன.

Update: 2024-03-25 02:33 GMT

மாஸ்கோ,

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது. வெடிகுண்டையும் வீசியது.

இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்து உள்ளது.

அவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 182 பேர் காயமடைந்தனர். 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ரஷியாவில் நாள் முழுவதும் தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால், அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன.

இதேபோன்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதின் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றினார்.

இந்த தாக்குதல் பற்றி புதின் கூறும்போது, தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்தனர் என்று கூறினார். எனினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் 2 பேருக்கு எதிராக மாஸ்கோவில் உள்ள கோர்ட்டு ஒன்றில் குற்றச்சாட்டு பதிவானது. இதில், தலேர்த்ஜான் பரோதேவிச் மிர்ஜோயேவ் மற்றும் சைதக்ரமி முரோதலி ரசாபலிஜுடா ஆகிய 2 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

இதில், மிர்ஜோயெவ் என்ற தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்பு கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், மே 22-ந்தேதி வரை அவரை விசாரணைக்கு முந்தின காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்