தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை செலுத்தியது சீனா

கருந்துளைகள் மற்றும் ஈர்ப்பு அலைகள் ஆகியவை ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் கணிப்புகள் என்பதால், இந்த செயற்கைக்கோளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 12:36 GMT

பீஜிங்:

பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியது.

ஐன்ஸ்டீன் புரோப் (EP)என்ற இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளது. செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை கொண்டது. மலர்ந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், 12 இதழ்கள் மற்றும் இரண்டு மகரந்த தண்டுகள் போன்ற அமைப்புகள் உள்ளன. 12 இதழ்களும் நீண்ட தொலைவை கண்காணித்து படம் பிடிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் கொண்ட 12 தொகுதிகளாகும். இரண்டு தண்டுகள் போன்ற அமைப்பில் குறுகிய தொலைவை கண்காணிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உள்ளன.

இந்த தொலைநோக்கிகள் விண்வெளி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகின்றன. இது விஞ்ஞானிகளுக்கு சூப்பர்நோவா வெடிப்புகளிலிருந்து வரும் முதல் ஒளியை படம் பிடிக்க உதவுகிறது. ஈர்ப்பு அலை நிகழ்வுகளுடன் கூடிய எக்ஸ்-ரே சிக்னல்களை தேடி கண்டுபிடிக்கிறது. மேலும் செயலற்ற கருந்துளைகள் மற்றும் பிற மங்கலான நிலையற்ற மற்றும் மாற்றம் அடையக்கூடிய வானியல் பொருட்களை கண்டறிய உதவுகிறது.

கருந்துளைகள் மற்றும் ஈர்ப்பு அலைகள் ஆகியவை ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் கணிப்புகள் என்பதால், இந்த செயற்கைக்கோளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என இந்த திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், சீன அறிவியல் அகாடமியின் தேசிய வானியல் ஆய்வக ஆராய்ச்சியாளருமான யுவான் வெய்மின் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "நமது கண்களுக்கு தெரியும் நட்சத்திரங்கள் நிறைந்த வானம் அமைதியாக இருக்கிறது. ஆனால் உண்மையில், பிரபஞ்சத்தில் பல கடுமையான வானியல் செயல்பாடுகள் நடக்கின்றன. அதாவது மிகப்பெரிய நட்சத்திரங்களின் அழிவால் ஏற்படும் வெடிப்புகள், நட்சத்திரங்களை விழுங்கும் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளுக்கு இடையிலான வினோதமான மோதல்கள் என பல செயல்பாடுகள் நடக்கின்றன.

இவ்வாறு வெடிக்கும் வானியல் நிகழ்வுகள் நமது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும். அவற்றின் இயற்பியல் பண்புகள் மற்றும் செயல்முறைகள் பற்றி நமக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவற்றை ஆய்வு செய்பவதன்மூலம், பிரபஞ்சம் எதனால் ஆனது? தீவிர பிரபஞ்சத்தை இயக்கும் இயற்பியல் விதிகள் என்னென்? நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகி அழிகின்றன? என்பது போன்ற மிக அடிப்படையான அறிவியல் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்க உதவியாக இருக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்