டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் ஜனநாயகம் அழிக்கப்படும்: பைடன் பிரசாரம்

டிரம்பின் பிரசாரம் அவரை பற்றியே உள்ளது. அமெரிக்காவை பற்றியோ, உங்களை பற்றியோ அல்ல என தேர்தல் பிரசாரத்தில் பைடன் பேசியுள்ளார்.

Update: 2024-01-06 04:47 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. இதில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனினும், பெருமளவிலான மக்கள் ஆதரவும் அவருக்கு காணப்படுகிறது. இதனால், அதிபர் தேர்தலில் பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அவருடைய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கேபிட்டால் கட்டிடத்தின் மீது ஏறியும், கொடிகளை ஏந்தியபடி உள்ளே சென்றும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பலர் காயமடைந்தனர். இதனால், கட்டிடத்தின் உள்ளே இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக அலறி ஓடினர்.

கலவரக்காரர்களை கலைக்க போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் அதிபர் பைடன் தன்னுடைய முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், டொனால்டு டிரம்பை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது அவர், டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

பைடன் தொடர்ந்து பேசும்போது, டிரம்பின் பிரசாரம் அவரை பற்றியே உள்ளது. அமெரிக்காவை பற்றியோ, உங்களை பற்றியோ அல்ல. அவருடைய பிரசாரம் கடந்த காலத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே உள்ளது. வருங்காலம் பற்றி இருக்கவில்லை. நம்முடைய ஜனநாயகத்தினை தியாகம் செய்ய தயாராகி விட்டு, அவரை அதிகாரத்தில் அமர்த்த பார்க்கிறார் என்று பைடன் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்