நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

Update: 2023-01-12 11:40 GMT



நியூயார்க்,


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது பல வகைகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

அமெரிக்காவில், கடந்த 7-ந்தேதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவின் இந்த ஒமைக்ரான் வைரசின் துணை வகை தொற்றானது சமீப நாட்களாக விரைவாக பரவி வருகிறது. எனினும், இந்த வகை வைரசானது, சர்வதேச அளவில் தொற்றை ஏற்படுத்தி புதிய அலையை ஏற்படுத்த கூடிய சாத்திய கூறுகள் பற்றி தெளிவாக தெரியவில்லை.

இந்த சூழலில், கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வர கூடிய எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான மூத்த அவசரகால அதிகாரி கேத்தரீன் ஸ்மால்வுட் கூறும்போது, விமானத்தில் புறப்படும் முன் நாடுகள் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். வேற்றுமையின்றி பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடுகள் அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அதனால், அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று எங்கள் அமைப்பு பரிந்துரைக்க வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், 27 அரசாங்கங்களை சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் அதிகாரிகள் அடங்கிய குழுவானது, சீனாவில் இருந்து புறப்பட்டு வரும், சென்று சேரும் விமான பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் பரவலான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் பரிந்துரைத்து இருந்தது.

ஏனெனில், சீனா கொரோனா பற்றிய தகவலை குறைத்து காட்டுகிறது என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் நம்புகின்றனர்.

அமெரிக்காவில் பரவல் அதிகரித்துள்ள இந்த சூழலில், கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வர கூடிய மற்றும் நீண்டதூர விமான பயணம் மேற்கொள்ளும் எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்