ஈரானில் பயங்கரம்: வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - 15 பேர் பலி
ஈரானில் வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.;
டெஹ்ரான்,
ஈரானில் வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.
ஈரான் நாட்டின் தென்மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த வழிபாட்டு தலத்தில் ஏராளமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டு தலத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. வழிபாட்டு தலத்தில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட அனைவரும் உயிர் பயத்தில் அலறியபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் அந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தவில்லை. தங்களின் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினர்.
இதில் 50-க்கும் அதிகமானோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களில் சிறுவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இதனிடையே இந்த துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
பின்னர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொரு பயங்கரவாதி போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த சுமார் 40 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.