பாகிஸ்தானில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிப்பு

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

Update: 2024-02-12 22:17 GMT

இஸ்லாமாபாத்,

265 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ந் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஒரு தொகுதியை தவிர மீதமுள்ள 264 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கட்சி அடிப்படையில் அதிக இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பிலாவல் சர்தாரி பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றியது. முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் என்கிற கட்சி அதிகபட்சமாக 17 இடங்களை கைப்பற்றியது. மேலும் 17 தொகுதிகளை சிறிய கட்சிகள் பிடித்து உள்ளன.

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்த பெரும்பான்மை பலம் கிடைக்காததால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கூட்டணி அரசு அமைப்பதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.

இதில் முக்கியமாக, 4-வது முறையாக பிரதமராகும் கனவில் இருக்கும் நவாஸ் ஷெரீப் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்.

இம்ரான்கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். அதன்படி பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முட்டாஹிதா குவாமி இயக்கத்துடன் நவாஸ் ஷெரீப்பின் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்