5 நாட்கள் தனிப்பட்ட பயணம்.. இன்று சீனா செல்கிறார் நவாஸ் ஷெரீப்

மருத்துவ காரணங்களுக்காக 2019ம் ஆண்டு நவம்பர் லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார்.

Update: 2024-04-22 12:24 GMT

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் (வயது 74), ஐந்து நாள் பயணமாக இன்று சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தாரும் செல்வதாக ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என்றும், இந்த பயணத்தின்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாகாணத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கூட்டங்களை நவாஸ் நடத்த உள்ளதாகவும், சீன நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஐகோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் லாகூரில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் 4 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்த நவாஸ் ஷெரீப் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு திரும்பினார். அதன்பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று சீனா செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்