பாகிஸ்தான்: 2024-ல் கராச்சியில் சிறுமி உள்பட 26 பேர் பலி; பகீர் தகவல்

வீட்டு வாசலில் தந்தையுடன் இருந்த 2 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2024-02-25 03:11 GMT

கராச்சி,

பாகிஸ்தானில் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு என மக்கள் பல்வேறு துயர்களை எதிர்கொள்ள முடியாமல், சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது. எனினும், அதிகாரப்பூர்வ ஆட்சி அமையாமல் இழுபறி நிலையே காணப்படுகிறது.

இந்த சூழலில், நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் இதுவரை 26 பேர் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி கண்காணிப்பாளர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் கூறும்போது, கராச்சி நகரில் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் தவறி விட்டனர். தெருக்களில் காவல் அதிகாரிகள் இருந்தபோதும் கூட, கொள்ளைக்காரர்கள் நகரம் முழுவதும் கட்டுப்பாடின்றி சுற்றி திரிந்து வருகின்றனர் என கூறினர். காவலர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரி வருகின்றனர்.

தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நகரில் ஒவ்வொரு நாளும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. இதில், கொராங்கி பகுதியில் கடந்த வெள்ளி கிழமை வீட்டு வாசலில் தந்தையுடன் இருந்த 2 வயது சிறுமி சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2 நாட்களில் 3 பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்கும்போது இந்த குற்ற செயல்கள் நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, கராச்சி நகரில் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. தெருக்களில் மொபைல் போன்களை பறித்து செல்லுதலில் தொடங்கி, கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் ஆகியவற்றையும் அபகரித்து செல்கின்றனர்.

போதிய காவல் துறை பலம் இல்லாதது, காவல் துறையில் அரசியல் தலையீடு ஆகியவை தெருவோர குற்ற சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணங்களாக அமைந்து விட்டன என கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால், தகுதி வாய்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அரசு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்