கனடா தேர்தலில் தலையிட சீனா முயற்சி..!! - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டு
கனடா தேர்தலில் தலையிட சீனா முயற்சி செய்ததாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.;
கோப்புப்படம்
ஒட்டாவா,
நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சீனா அதிகாரப்பூர்வமற்ற போலீஸ் நிலையங்களைத் திறந்ததுள்ளதாக சமீபத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கனடாவிலும் சீனா சட்டவிரோதமாக போலீஸ் நிலையங்களை நிறுவியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை கனடா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா தலையிட முயற்சித்ததாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
கனடாவில் சீனாவின் சட்டவிரோத போலீஸ் நிலையங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது கனடாவில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் சீனா தலையிட முயற்சித்ததை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அரசியல் வட்டங்களுக்குள் செல்வாக்கு பெறுவதற்காக சீனா தனக்கு ஆதரவான வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆளும் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் குறிவைத்து இந்த குறுக்கீடு முயற்சி நடந்துள்ளது.
கனடாவின் ஜனநாயக அமைப்புகளுடன் சீனா ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுகிறது. நமது தேர்தல் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த நாம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மேலும் தேர்தல் குறுக்கீடுகளுக்கு எதிரான போராட்டத்தில், நமது ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களின் வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.