இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-10-01 17:13 GMT

அங்குள்ள கடற்கரை நகரமான சிபோல்காவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடும் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் உள்பட டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிபோல்கா நகரில் நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சியால் 62 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்