வாசுகி நாகம் வழிபட்ட ரத்தினபுரீஸ்வரர்

தேவர்கள் அமுதம் எடுக்க மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர்.

Update: 2017-02-28 02:00 GMT
தேவர்கள் அமுதம் எடுக்க மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர். இதனால் வாசுகியின் உடல் நலிவுற்றது. தனது உடல் நலம் பெற மாணிக்க வண்ண சுவாமியை, தினமும் ஆராதனை செய்துவந்தது வாசுகி. இதையடுத்து அதன் உடல் வலிமை பெற்றது. அதன்பிறகு அனுதினமும் மாணிக்க வண்ண சுவாமியை வழிபட நினைத்த வாசுகி, அந்த தலத்தில் உள்ள தல விருட்சமாக வாகை மரத்தடியில் குடிகொண்டாள்.

திருவாளபுத்தூரில் உள்ள ரத்தினபுரீஸ்வர சுவாமி ஆலயம் தான் வாசுகி ஆராதனை செய்த ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி. இறைவனின் இன்னொரு பெயர் ரத்தினபுரீஸ்வரர். இறைவி பெயர் வண்டமர் பூங்குழலம்மை நாயகி என்பதாகும். அன்னையின் இன்னொரு பெயர் ப்ரமர குந்தலாம்பாள்.

ஆலய அமைப்பு

இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம் இல்லை. ஆனால், முன் முகப்பு அழகாக உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரகாரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலது புறம் நடராசர், சிவகாம சுந்தரி சன்னிதி உள்ளது.

அடுத்து உள்ளது மகாமண்டபம். இதன் வலதுபுறம் இறைவி வண்டமர் பூங்குழல் நாயகியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.

இத்தலம் சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், அப்பர் ஆகியோரால் பாடப் பெற்றத் தலம். இதைக் குறிக்கும் வண்ணம் மகாமண்டபத்தின் தென் திசையில் மூவர் திருமேனிகளும் உள்ளன. மகா மண்டபத்தின் வடதிசையில் குருஸ்தான முடையார் சன்னிதி உள்ளது. இங்கு குரு ஸ்தான முடையார், குருமுக நாயகி, சட்டநாதர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.

அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் நிருதி விநாயகரும், வலதுபுறம் திருப்பாற்கடல் கடைந்த வாசுகியின் திருமேனியும் உள்ளன. அடுத்ததாக அமைந்த கருவறையில் இறைவன் மாணிக்க வண்ண சுவாமி, லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

பரிகார தெய்வங்கள்

இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நடன விநாயகர் ரி‌ஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது மிகவும் அபூர்வமான காட்சி என பக்தர்கள் கூறுகின்றனர். தேவ கோட்டத்தின் மேல்புறம் லிங்கோத்பவர். வடபுறம் பிரம்மா, அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை திருமேனிகள் உள்ளன.

பிரகாரத்தின் தென்புறம் மெய்கண்டார், மேல்புறம் விநாயகர், வள்ளி, தேவசேனா, முருகன், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு வடக்குப் பிரகாரத்தில் இரண்டு சண்டீஸ்வரர் சன்னிதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்று இறைவனின் வடக்குப் பிரகாரத்திலும் இன்னொன்று இறைவிக்கு அருகேயும் உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் இரட்டைப் பைரவர், சூரியன், சந்திரன், திருமேனிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தலவிருட்சமான வாகை மரம் உள்ளது. அதன் மேடையில் வாசுகி, கணபதி, அஷ்ட நாகர்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆராதனைகள்

தை, ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தல விருட்சத்தின் அடியில் உள்ள வாசுகி நாகம் மார்கழி சஷ்டி அன்று இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கி நலம் பெற்றதாக ஐதீகம். அன்றைய தினத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் பங்கு பெற்றால் ராகு தோ‌ஷம் விலகும் என்பது உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

சிவராத்திரி, நவராத்திரி, சோம வாரம், பிரதோ‌ஷம், சித்திரை முதல் நாள், தீபாவளி, பொங்கல், கார்த்திகை ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண நூற்றுக் கணக்கில் பக்தர்கள் திரள்கின்றனர்.    தை மாத கடைசி வெள்ளியில் துர்க்கை வீதியுலா வருவதுண்டு. மார்கழி மாத திருவாதிரையில் நடராஜரும் சிவகாமியும் வீதி உலா வருவார்கள்.

தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பில்லி சூன்யம் மற்றும் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீக்கும் தலங்கள் நம் தமிழ்நாட்டில் அபூர்வம். அத்தகைய சக்தி படைத்த துர்க்கை அருள்பாலிக்கும் இத்தலத்திற்கு நாமும் ஒரு முறை பயணம் மேற்கொண்டு பயன் பெறலாமே.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் – பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள, மணல்மேட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருவாளப்புத்தூர் என்ற இந்த தலம்.

–ஜெயவண்ணன்.

மேலும் செய்திகள்