மார்கழி திருவிழா: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தையொட்டி சுசீந்திரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2026-01-02 10:59 IST

குமரி,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாச பர்வத வாகன பவனியும் நடைபெற்றது.

8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதல் நடந்தது. அப்போது பேரம்பலம் கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்த நடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.

மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் சாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகி அம்மனும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெரிய தேரான சாமி தேரில் சாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளியுள்ளனர். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர்கள். 4 ரத வீதிகள் வழியாக மேல தாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும்.

அதன் பின்னர் சாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தொடர்ந்து கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களித் திருவிழாவும் நடைபெறும். விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி சுசீந்திரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வாகனங்கள் ஆசிரமம் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும். இதுபோல் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்கள் ஆசிரமம் புறவழிச்சாலை பகுதியில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேராட்டத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்